403. ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் - TPV4
இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
*******************************************
திருப்பாவையின் நான்காம் பாசுரத்தில் நாடு செழிக்க மழையை அருளுமாறு வருணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்!
மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்: 
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
"மழை பொழிவதற்கு காரணக்கடவுளான வருண தேவனே! உன் மழையாகிய நீர்க்கொடையை சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாதே! கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, கம்பீர முழக்கமிட்டு மேலேறி, வான் மேகங்களில் பரவி, திருமாலின் கருமேனி ஒத்த நிறம் பெற்று, மூங்கில் போன்ற அழகிய தோள்களையுடைய திருமாலின் வலக்கரத்தில் வீற்றிருக்கும் சுரதர்சன சக்கரம் போல் மின்னலாக பிரகாச ஒளி வீசி, பரமனது இடக்கரத்தில் உள்ள வலம்புரி சங்கின் சப்தம் போல் இடி இடித்து முழங்கி, அப்பரமன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு மழைக்கு ஒப்பாக, சிறிதும் தாமதியாமல், மக்களின் நல்வாழ்வுக்காகவும், நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும், பூவுலகெங்கும் பெருமழை பொழிய வேண்டுகிறோம்."
பாசுர உள்ளுரை:
இப்பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும், பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.
ஆழிமழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்
ஒன்று நீ கை கரவேல் - மூன்று மகாமந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்
ஆழியுட் புக்கு - வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து
முகந்து கொடு - அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து
ஆர்த்தேறி - கம்பீரமாக எழுந்து
ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து - கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால், ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்! (பரந்தாமனின் எல்லையற்ற கருணையாக ஆச்சார்யர் உருவகம் பெறுகின்றனர்!)
இங்கே "மேகம்" என்பது ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும் உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது. மேகம் போலவே ஆச்சார்யர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல், ஞானத்தை வழங்குகின்றனர்!
எவ்வாறெனில், மேகமானது, கடல் நீரை உட்கொண்டு, பூவுகலகிற்கு நன்மை பயப்பது போல, இவ்வடியார்களும், பகவத் அனுபவத்தில் (பரமன் துயில் கொண்டுள்ள கடலாகிய உருவகம்!) திளைத்து அதன் வாயிலாக கிட்டிய ஞானத்தை (மழையாகிய உருவகம்!) இப்பூவுலகில் நிறைத்திருக்கிறார்கள்!
கடலில் கலந்திருக்கும் உப்பைப் போன்ற, புரிந்து கொள்ள கடினமான விஷயங்களையும் எளிமையாக (உப்பு சுவையில்லாத மழை நீர் போல) அளிக்க வல்லவர்கள் ஆச்சார்யர்கள்!
ஆழிபோல் மின்னி - திவ்யஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற
ஆச்சார்யர்கள் (ஞானத்தால்ஒளி பெற்றதால்!) திருச்சக்கரமாகவும் உருவகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!
வலம்புரி போல் நின்றதிர்ந்து - ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் - ஞானத்தை மழை போல் பொழிந்து
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் - (மோட்ச சித்தியை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில் நாங்கள் சரண் புகுந்தோம் ("மார்கழி நீராட" என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)
பாசுரச் சிறப்பு:
உறுப்புகளில் கண் எவ்வாறு முதன்மையானதோ, அது போல வருணன் மழைக்கு முதல் காரணகர்த்தா என்பதால், ஆண்டாளால் "கண்ணா" என்று விளிக்கப்படுகிறார்!
இன்னொறு ரசமான விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். மாதவன், கேசவன், தாமோதரன், பத்மனாபன், நாராயணன், கோவிந்தன் என்ற திருநாமங்கள் திருப்பாவையில் பல பாசுரங்களில் பாடப் பெற்றிருந்தாலும், கிருஷ்ணாவதார நிகழ்வுகள் பல இடங்களில் சுட்டப்படிருந்தாலும், இப்பாசுரத்தில் தான் கிருஷ்ணாவதாரப் பெயரான "கண்ணா" என்பதை ஆண்டாள் விளித்துப் பாடுகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது! மழைத் தேவனான வருணனை அழைப்பதாகவே இருந்தாலும், வருணனைக் கூட நாச்சியார் கண்ணனாகவே கண்டாள் என்பதை ஒரு கவித்துவ நயமாக கொள்ளலாமில்லையா!
"மழைக்கண்ணா" என்று பாடாமல் "ஆழிமழைக்கண்ணா" என்கிறாள் ஆண்டாள்! அதாவது, வருணனின் பெருமையின் விஸ்தாரத்தை (மழைக்கு முதற்காரணமான கடல்களுக்கெல்லாம் வருணன் தலைவன் என்பதை!) ஒரு விளிப்பில் அழகாகச் சொல்கிறாள்!
"ஒன்று நீ கை கரவேல்" எனும்போது, வருணனுக்கு பரமன் வழங்கியுள்ள அற்புதமான (உலக உயிர்க்கெல்லாம் வாழ்வளிக்கும்) தொழிலின் மகத்துவம் நயமாக வெளிப்படுகிறது. தனது வள்ளல் தன்மையை ஒருபோதும் குறைத்துக் கொள்ளலாகாது என்பதை வருணனுக்கே நினைவூட்டுகிறாள் சின்னப்பெண் கோதை!
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து - கருமேகமானது தனது கொடையான மழையை பூமிக்கு வழங்கிய மாத்திரத்தில் வெளுத்து விடுகிறது. ஆனால், ஆச்சார்யர்களும், அப்பரமனும் ஞானத்தையும் அருளையும் குறைவின்றி அளித்துக் கொண்டே இருக்க வல்லவர்கள் ஆதலால், அவர்களின் கருமை நிறம் குன்றுவதில்லை!
அதோடு, மழை பெய்வது ஒரு மங்கலகரமான செயல் என்பதால் மங்கல இசையாக வலம்புரி நின்றதிர்வது போன்ற சத்தமும் வேண்டும் என்கிறாள்.
பத்மனாபன் கையில் ஆழி ஏன் மின்ன வேண்டும்? பரமனின் நாபியிலிருந்து எழுந்த தாமரை மலரில் பிரம்மன் அவதரித்ததால், பரமனுக்கு பத்மனாபன் என்ற திருநாமம். பரந்தாமனுக்கு மகனாக பிரம்மா பிறந்ததை எண்ணி அவனது சுதர்சன சக்கரம் மகிழ்ந்து மின்னியதாம்! திருப்பாவையில் ஒவ்வொரு பெயர்ப் பிரயோகத்திற்கும் காரணம் உண்டு, அது தான் ஆண்டாள்!
இறுதியாக, "வாழ உலகினில் பெய்திடாய்" என்று பாடுவதிலும் விஷயமிருக்கிறது. பெருவெள்ளம் வந்து அழிவேற்படாத வகையில் மழையை அருளுமாறு முத்தாய்ப்பாக வருணனுக்கு ஞாபகப்படுத்துகிறாள்.
தமிழ் இலக்கணம் இங்கு நின்று விளையாடுகிறது :)
"ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து" எனும்போது மெய் உவமையும், உரு உவமையும்,
"ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" எனும்போது வினை உவமையும்,
"சரமழை போல்" எனும்போது பயன் உவமையும் வெளிப்படுவதைக் காணலாம்.
இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான "ழ" என்ற எழுத்து "ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து" என்று பதினோரு முறை வருவதைக் காணலாம்.
இதன் மூலம், சூடிக் கொடுத்த நாச்சியார், தனது தந்தையான பெரியாழ்வாரை மிஞ்சி விடுகிறார் ! பெரியாழ்வாரின் "குழல் இருந்து" என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில் "ழ" பத்து முறை வரும் என்பது குறிப்பிடத்தக்கது :)
சங்கர் தனது பின்னூட்டத்தில் சொன்ன சுவையான விளக்கத்தையும், அதற்கான எனது மறுமொழியையும் பதிவிலேயே சேர்த்து விட்டேன் :)
**********************************
அன்புள்ள பாலா
இந்த நான்காவது பாசுரத்திற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான வியாக்கியானத்தை கேட்டிருக்கிறேன்.
"ஆழி மழைக் கண்ணா" என்று வருணனை ஏன் அங்கு கண்ணனின் நாமமிட்டு அழைத்தார் ? " ஒன்று நீ கை கரவேல் " அதாவது " ஒன்றை நீ மறைக்காதே " என்று சொல்கிறார். எதை மறைக்காதே என்று சொல்கிறார் ?
"ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்"
இந்தக் காரியமாகிய மழை பொழிவித்தலை செய்ய சூரியனுடைய துணை வேண்டுமல்லவா.. அந்த சூரியனையும் மறைக்கக் கூடிய வல்லமை பெற்றவன் நீ (மகாபாரதத்தில் ஜெயத்ரதன் வதம் போது சக்கரம் விட்டு சூரியனை மறைத்தது) அதனால் ஏதாவது பக்தனுக்கு அருள் பாலிப்பதற்காய் அப்படி சூரியனை மறைத்து மழை பெய்விக்காமல் செய்துவிடாதே..உலகம் வளம் பெறவும் நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து உன்னை துதிக்கவும் மழை மிகவும் அவசியம் என்று சொல்கிறாராம். அதனால் தான் மழை கொடு என்று சிம்பிளாக கேட்க்காமல் முழு water cycle -ஐயும் இந்த பாசுரத்தில் குறிப்பிடுகிறாராம் :)
இது சரியான விளக்கமா...over to Bala,KRS & Kumaran :)
**********************************
சங்கர்,
சூரியனை மறைத்து விடாமல் இருக்குமாறு ஆண்டாள் பரமனாகிய கண்ணனிடம் வேண்டுவதாக தாங்கள் கூறிய விளக்கத்தின் தொடர்ச்சியாக நான் (வீட்டுக்குள்ளேயே!) ரூம் போட்டு யோசித்ததில் தோன்றியதை எழுத உத்தேசம் :)
"ஆழிமழைக் கண்ணா, ஒன்று நீ கை கரவேல்" என்று கோதை நாச்சியார் பாடும்போது பரந்தாமனைத் தான் விளித்து வேண்டுகிறார் என்று எண்ண பாசுரத்தில் சாத்தியம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. மழைக்குக் கடவுளாக வருணன் இருப்பினும், கடல் நீரை ஆவியாக்குவதால், சூரியனே முதல் காரணகர்த்தா ஆகிறான்! ஆனால், கடல் நீருக்குச் சொந்தக்காரன் வருணன் என்பதால், மழை பொழிய சூரியன், வருணன் ஆகிய இருவருமே பிணக்கின்றிச் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது இல்லையா ?
அதனாலேயே (மேலோட்டமாகப் பார்த்தால், வருணனை "கண்ணா" என்றழைப்பது போல் தோன்றினாலும்!) சூரியன், வருணன் என்ற இருவருக்கும் (மற்றும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும்) தலைவனான பரமாத்விடம், மார்கழி நீராட மழை வேண்டி விண்ணப்பிப்பதே உகந்தது என்று ஆண்டாள் பாடுவதாக சொல்வதும் பொருத்தமானதே !!!!
மேலும், சூடிக் கொடுத்த நாச்சியார் வெறுமனே "சூரியனை மறைத்து விடாதே!" என்று கூறாமல், மழைச் சுற்றையே (இதை 'வாட்டர் சைக்கிள்' என்று அழைக்க வேண்டாமே:)) அறிவியல் ரீதியாக விவரித்து, மழை பொழிவதற்கு சூரியனின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறார்!
அதே சமயம், எல்லாமறிந்த பரமனுக்கே தான் "மழை விளக்கம்" அளிப்பதற்காக கண்ணனுக்கு கோபம் வந்து விடுமோ என்ற எண்ணத்தில், மின்னலைச் சக்கரத்தின் பேரொளிக்கும், இடியை சங்கத்தின் முழக்கத்திற்கும், மழையை சார்ங்கத்திலிருந்து புறப்பட்ட அம்பு மழைக்கு ஒப்பாக பாசுரத்தில் பாடி கண்ணபிரானை மனம் குளிர வைத்து விடுகிறார் ! இதன் பின்னரும், அடியவர் மார்கழி நீராடி மகிழ, மழைக்கொடையை வழங்காமல் கண்ணனால் இருக்க முடியுமா என்ன ? :)
ஆண்டாள் நாச்சியார், "ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" என்று பாடுவது மின்னலைத் தொடர்ந்தே இடி முழக்கம் ஏற்படுகிறது என்பதால்! ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தைக் காட்டிலும் மிக அதிகம் என்பது கோதை நாச்சியாருக்குத் தெரியாத விஷயமா என்ன ?
என்றென்றும் அன்புடன்
பாலா
***********************************
என்றென்றும் அன்புடன்
பாலா





























